செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

இயற்கையின் சாமத்தியம்

தீபக மோகன்

இயற்கைவளங்கள், சுற்றுச் சூழல், உயிரினங்களுடன் நெருங்கிச்செல்லும் மாணவர் சமுகம

விஞ்ஞான உலகம் இன்று மனிதனை வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. சூழலியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள் என்று பலர் இன்று தினமும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது படைக்கின்றார்கள். வேட்டையாடி தனது அன்றாட உணவுத் தேவைகளை நிறைவுசெய்துகொண்டிருந்த பண்டைக்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி, இன்று பாஸ்ட் புட் (Fast Food) யுகம் வரையில் வளர்ந்துவிட்டது. தொடர்பாடலுக்கு புறாக்களை நம்பியிருந்த காலம் போய், இன்றைய தகவல் யுகத்தில் கணினியும், இணையமும் உலகத்தை உள்ளங்கைகளுக்குள் சுருக்கிவிட்டது.
இவையெல்லாம் மனுக்குல வளர்ச்சியின் அற்புதமான விளைவுகள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. இது மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் இன்று நாம் கற்பனை பண்ணியே பார்த்திராத இன்னும் பல புதிய வளர்ச்சிப் படிகளுக்கும் மனுக்குலம் சென்றுகொண்டே இருக்கப்போகிறது. இதில் குறைகாணவோ, அல்லது அதனைத் தடுத்து நிறுத்தவோ முடியாது.
மனித குலத்தின் இந்தச் சாதனைகள் யாவும் அதன் அறிவியல் வளர்ச்சியின் பெறுபேறுகளே என்றாலும், இயற்கையின் கொடையின்றி இவையெல்லாம் சாத்தியமில்லை. மனுக்குலுப் படைப்புக்கள் எவற்றுக்குமே இயற்கை வளங்களே மூலப்பொருள்கள். மண்ணும், கல்லும் இன்றி கட்டடங்கள் இல்லை. நீர் வீழ்ச்சியோ, இரசாயனப்பொருள்களோ இன்றி மின்சாரம் இல்லை. பெற்றோலியப் படிமங்கள் இன்றி போக்குவரத்து இல்லை. சிலிக்கன் படிமங்கள் இன்றி இன்றைய இலத்திரனியல் கண்டுபிடிப்புக்கள் எவையுமே சாத்தியமில்லை.
ஆக, மனுக்குல அறிவியல் வளர்ச்சியின் சாதனைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது இயற்கை வளங்களே. அள்ளித்தரும் பூமியின் அனுசரணையின்றி எந்தக் கண்டுபிடிப்புக்களும், படைப்புக்களும் சாத்தியமே இல்லை. அப்படியிருக்க, எல்லாம் எமது சாதனை என்று மனுக்குலம் இறுமாந்திருப்பது எப்படிச் சாத்தியம்?
இந்த இயற்கை வளங்களைக் கொண்டு தான் படைக்கும் சாதனைகளில் இறுமாந்திருக்கும் மனிதர்கள், அவற்றின் விளைவாக இயற்கைக்குத் தீங்குவிளைவிக்கும் காரியங்களையும் செய்து முடிக்கிறான். இயற்கை மூலவளங்களைக் கொண்டு அவன் படைக்கும் சாதனைகளின் விளைபொருள்கள் இயற்கையை நாசம் செய்துகொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் இயற்கை வளங்கள் அருகிவருகின்றன. மறுபுறம், மனுக்குலப் படைப்புக்களின் கழிவுகளால் இயற்கைச் சூழல் மாசடைந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழல் மாசடைதல் குறித்த எந்த அக்கறையுமின்றி பெருகிவரும் சனத்தொகைக்கும், அதற்கேற்ப அதிகரித்துவரும் புதிய தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மனித குலத்தின் செயற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
எனினும், அண்மைக்காலமாக இயற்கை வளங்கள் அருகிவருகின்றமை குறித்தும், சூழல் மாசடைந்து வருவது குறித்தும் மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் எதிர்காலச் சந்ததியை படு ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்று விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். கிறீன் பீஸ் இயக்கம் போன்ற அமைப்புக்கள் சூழல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
சூழல் தொடர்பான இந்த விழிப்புணர்வு உண்மையில் இளம் சந்ததியிடம் ஏற்படுத்தப்படுவதே அவசியமானது. இளம் சந்ததி, குறிப்பாக மாணவர் சமுதாயம் இதுகுறித்து அக்கறை கொண்டு செயற்படும்போதே, சூழல் பாதுகாப்பு என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இதற்கு சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வையும், அக்கறையையும் ஊட்டுவது அவசியமானது.
இன்று பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு 3ஆம் தரத்தில் இருந்தே சுற்றுச்சூழல் சம்மந்தமாக கல்வி புகட்டப்படுகிறது. சிறு பராயத்திலேயே பிள்ளைகள் இந்த சுற்றுச்சூழல் குறித்த தமது கல்வியினை ஆரம்பித்து விடுகின்றனர். இது வரவேற்கத்தக்கதாகும் என்று குறிப்பிடுகிறார் பாடசாலை ஆசிரியர் ஒருவர். இதற்கு சிறுவர்கள் மத்தியில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கான ஊக்குவிப்பு செய்யப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று நாள் முழுதுவும் காலையில் பாடசாலை, மாலையில் தனியார் கல்வி நிலையம் பின்னர் கணினி வகுப்பு மற்றும் பிற வகுப்புக்கள் என்று கல்விக்காக ஓடித்திரியும் பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பாக அக்கறை கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. சிறிது நேரமேனும் ஓய்வாக இருந்து, இயற்கையோடு உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தாலே இயற்கையின் அருமை சிறுவர்களுக்குப் புரியும். அதனோடு ஒட்டி உறவாடி மகிழும்போதே இயற்கை வளங்கள் அருகிப்போவதாலோ, சூழல் மாசடைவதாலோ ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த அக்கறை சிறுவர்களுக்கு ஏற்படும்.
இங்கே ஒரு சிறுமி இவ்வாறு இயற்கையோடு ஒட்டி உறவாடும் அழகை நாம் காண்கிறோம். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்லும் மனிதர்களிடையே பாம்புடன் உறவாடும் துணிவும், பரிவும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம். கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான இந்த சகிலா இஃபாம், தனது வீட்டுத் தோட்டத்தில் எந்த நேரமும் சிறு சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். திடீர் என்று தனது வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பாம்பொன்றையும் ஸ்பைடறொன்றையும் பிடித்துள்ளார். அதன் விளைவுகள் அறியாததால் அவ் ஸ்பைடரின் தாக்குதலுக்கும் அவர் ஒருதடவை இலக்காகியுள்ளார்.
இயற்கையோடு உறவாடும் தன்னுடைய உள்ளார்ந்த ஆர்வம் காரணமாக பாம்புகளோடு துணிந்து பழகும் அவரது திறமையை இங்கே இந்தப் படங்கள் பறைசாற்றுகின்றன. சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகளுடன் இணைந்த ஒரு முழுமையாகும் என்று குறிப்பிடும் இந்த மாணவி, எனவே, எம்மைச் சூழவுள்ள அனைத்து உயிரினங்களுடனும் நாம் துணிந்து உறவாடவேண்டும் என்று வாதிடுகிறார்.
எமது சுற்றுச் சூழல் குறித்தும், எம்மைச் சூழவுள்ள உயிரினங்கள் குறித்தும் எம்மிடையே இந்த அக்கறையும், ஆர்வமும் அதிகரித்துச் செல்லுமானால், இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் செய்ய எம்மால் முடியுமல்லவா?

கருத்துகள் இல்லை: